தர்பார் படக்குழுவை நோக்கி மாணவர்கள் கல்வீச்சு

கட்டுப்பாடுகள் அதிகமானதால் மோதல் நிலை

தர்பார் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்கள் அதிகளவில் கசிந்து வரும் நிலையில், அதற்கு படப்பிடிப்பு தளத்தில் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளதால் படக்குழுவுடன் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் மும்பையிலுள்ள பிரபலமான கல்லூரி வளாகத்தில் நடந்து வருகிறது. 3 மாதங்கள் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.

இந்நிலையில் ‘தர்பார்’ படப்பிடிப்பு காட்சிகள் தொடர்பான புகைப்படங்கள் உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவது தயாரிப்பு தரப்புக்கும், இயக்குனருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடுமையான பாதுகாப்புகளையும் மீறி இது மாதிரி படங்கள் வெளிவரக் காரணம் படப்பிடிப்பு நடக்கும் மும்பையிலுள்ள பிரபலமான கல்லூரி மாணவர்கள்தான். ஆர்வமிகுதியில் இப்படி செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இதையடுத்து கல்லூரி மாணவர்களை கட்டுப்படுத்தும் முயற்சி மேற்கொண்டனர்.

இதனால் படக்குழுவினருக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கல்லூரியின் மாடிக்கு சென்ற மாணவர்கள் படப்பிடிப்பை நோக்கி கற்கள் வீசும் அளவுக்கு நிலைமை சென்று இருக்கிறது. இதுகுறித்து தர்பார் படக்குழு கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இதில் சமரசம் ஏற்படாவிட்டால் படப்பிடிப்பு நடக்கும் இடத்தை மாற்றிவிடும் முயற்சியில் முருகதாஸ் ஈடுபட்டுள்ளார்.