இனியும் தொடர்ந்தால் ராதாரவி நடிக்க தடை விதிக்கப்படும்

நடிகர் சங்கம் எச்சரிக்கை

பட விழாவில் நடிகை நயன்தாராவை விமர்சித்த ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்த நடிகர் சங்கம், தொடர்ந்து இதுபோன்ற விமர்சனங்கள் தொடர்ந்து வருமாயின், ராதாரவிக்கு நடிக்க தடை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

பட விழாவில் நயன்தாராவை விமர்சித்த ராதாரவிக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது. ராதாரவிக்கு நடிகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் நாசர் அனுப்பி உள்ள கடிதத்தில் இது குறித்த தகவல்களுடன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“கொலையுதிர் காலம்” பட விழாவில் பெண்களை கொச்சைப்படுத்துவது போல் நீங்கள் பேசிய இரட்டை அர்த்த வசனங்களை கேட்டு மனது மிகவும் வருந்துகிறது. இதை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த மேடையில் மட்டும் அல்ல, பல காலங்களாக இதுபோல் இரட்டை அர்த்த வசனங்களையும், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறீர்கள். இது ஊடகங்களின் மூலம் உலகெங்கும் பரவி இருக்கிறது.

ஆனால் இதுபோன்ற கொச்சையான, கீழ்த்தரமான பேச்சுக்கள் உங்களுடைய மேன்மையை உயர்த்தாது அது மட்டுமல்லாமல், திரைத்துறையின் மேல் மக்களுக்கு இருக்கக்கூடிய நம்பிக்கையையும் சீரழிக்கும் என்பதை ஏன் உணரவில்லை.

அதை தவிர்த்து, இது போன்ற செயல்களில் நீங்கள் தொடர்ந்து செயல்படுவீர்கள் என்றால் தென்னிந்திய நடிகர் சங்கம் திரைத்துறையில் தங்களுக்கு தொழில் ஒத்துழைப்பு தருவது பற்றி, தீவிரமாக முடிவு செய்ய வேண்டி இருக்கும் என்பதை முன்னரே தங்களுக்கு இக்கடிதத்தின் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

Related Posts